பறக்க துடிக்கும் கிளி!

பறக்க துடிக்கும் கிளி!

2023 மார்ச் 5ஆம் தேதி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார், பாஜக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். மிகக் கடுமையான வார்த்தைகளில் பாஜக மாநிலத் தலைமையை அவர் விமர்சித்து அறிக்கை விடுத்த அன்றே அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டது புருவம் உயர்த்த வைத்தது.

ஜெயலலிதா அம்மையார், கலைஞர் ஐயா அவர்கள் தலைவர்கள், நானும் அந்த மாதிரி தலைவர் தான். பாஜகவில் இருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் தமிழகத்தில் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும்.

-அண்ணாமலை, மார்ச் 7 அன்று மதுரையில்.

மார்ச் 7, 2023.

பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் திலீப் கண்ணன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

மார்ச் 8, 2023

ஜெயலலிதா ஒன்றரைக் கோடி தொண்டர்களால் தலைவரானார். அதேபோல் தான் கலைஞரும் தலைவரானார். கார்ப்பரேட் நிறுவனமான பாஜகவின் கிளை மேலாளரைப் போல் இருப்பவரே அண்ணாமலை.

கோவை சத்யன், அதிமுக செய்தி தொடர்பாளர் ட்விட்டரில்

தலைவர் என்பது எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்பது முக்கியமல்ல. எப்படி செயல்படுகிறார் என்பது தான் முக்கியம். நேர்மையான முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு திராவிட இயக்கத்தவர்களின் சான்றிதழ் ஒரு நாளும் தேவையில்லை.

அமர் பிரசாத் ரெட்டி, பாஜக.

இதெல்லாம் கடந்த மார்ச் மாதம் ஆரம்பத்தில் பாஜக-அதிமுக இடையே நடந்த உரசல்கள். இவற்றைத் தொடர்ந்து மார்ச் 17 ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் நடந்த தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை புயலைக் கிளப்பினார். ‘தேசிய தலைமை தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் மாநில தலைவர் பதவியை விட்டு விலகிவிடுவேன்' என்ற அவரது பேச்சு சலசலப்பைக் கிளப்பியது.

சீனியர்கள் அண்ணாமலை பேச்சை ரசிக்கவில்லை. திருப்பதி நாராயணன் எதிர்கருத்தை பதிவு செய்தார்.

‘அண்ணாமலை பேசிய விஷயம் கட்சியின் மையக் குழுவில் பேசவேண்டியது. மேலும் கூட்டணி பற்றி முடிவு செய்வது தேசியத் தலைமைதான்' என்று கடிவாளம் போட்டவர் வானதி சீனிவாசன்.

18 மார்ச் அன்று நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவி விலகுவேன் என்று அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றார். சீனியர்கள் பொறுமையாக இருந்தாலும் அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள் மனநிலை வேறு மாதிரியாக இருக்கிறது. 2014-இல் அதிமுக தவிர்த்து வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பாஜகவுக்கு ஒரு எம்.பி.கிடைத்தார். ஆனால் 2019-இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதிகூட பாஜகவால் வெல்ல முடியவில்லை என்பதை சிந்திக்கவேண்டும். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி தொடர்ந்தால் காங்கிரஸின் நிலைமைதான் தமிழகத்தில் பாஜகவுக்கு நிகழும் என்பதாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தேசிய தலைமைக்கு தங்களுடைய வாதங்களை முன்வைக்கிறார்கள்.

அண்ணாமலையின் பேச்சுபற்றி அதிமுகவின் ஜெயகுமார், ‘ கூட்டம் இரு வகைப்படும். உள்ளரங்கக் கூட்டம், பொதுவெளிக்கூட்டம். பொதுவெளியில் பேசப்படும் கருத்துபற்றி கருத்து சொல்லலாம். உள்ளரங்கக் கூட்டம் பற்றிப் பேசுவது உசிதமாக இருக்காது. எது எப்படி இருந்தாலும் அதிமுக தலைமைதான் கூட்டணியை முடிவு செய்யும்,' எனக் கொளுத்திப் போட்டார்.

இந்த விவகாரம் யூட்யூபர்களுக்கு அளவில்லாத தீனியைக் கொடுத்துக் கொண்டிருக்க, விதவிதமான யூகங்கள்...

இந்த சூழலில் அண்ணாமலை தில்லிக்குப் பயணமானார். புதிய மாநிலத் தலைவர் அறிவிப்பு வரப்போகிறது என எதிர்பார்ப்புகள் உலவின. மார்ச் 23ஆம் தேதி அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்தார்.

திரும்பி வந்த அண்ணாமலை அடக்கி வாசிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், ‘பாஜக என்னும் கிளி கூண்டுக்குள் இருந்து பறக்கத் தயாராக இருக்கிறது' என்று மார்ச் 24 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பேச தொண்டர்கள் உற்சாகமாக கைத் தட்டி இருக்கிறார்கள்.

‘கிளிப்பேச்சு' அதிமுக வட்டாரத்தில் கொதிப்பை உண்டாக்கி உள்ளது. மார்ச் 24ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆளும் திமுக அமைச்சர்களுடன் விவாதத்தில் பேசிய அதிமுக  துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி,

‘தமிழ்நாட்டில் நீங்கள் (திமுக) எங்களை எதிர்க்கவேண்டும். நாங்கள் உங்களை எதிர்க்கவேண்டும். வேறு யாருக்கும் இங்கே இடமில்லை,' என்று பேசியிருப்பது பல பொருள் பொதிந்ததாகும்.

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் 2024 கூட்டணி பற்றி முடிவெடுப்போம் என எடப்பாடி அதிமுக தலைவர்களிடம் கூறியிருப்பதாகத் தகவல்.

கூட்டணி விவகாரத்தில் சட்டச்சிக்கல் உள்ள அதிமுக தலைவர்கள் பெருமூச்சுடன் அமைதி காப்பதுதான் எடப்பாடியின் பிரச்னை என்கிறார்கள் உள்விவகாரம் தெரிந்த எடப்பாடியின் ஆதரவாளர்கள். பாஜகவின் பிற மூத்த தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றே வெளியே சொல்லி, மூச்சை இழுத்துப் பிடித்திருக்கிறார்கள்.

அண்ணாமலை கொளுத்திய வெடி, வெடிக்குமா?  தெரிய இரண்டு மாதங்கள் காத்திருக்கவேண்டும்.

ஏப்ரல், 2023 அந்திமழை இதழ்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com